மக்களிடம் தன்னெழுச்சியைக் காண முடிகிறது: பைக்கில் சென்று வாக்களித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

பைக்கில் சென்று வாக்களித்த விஜயபாஸ்கர்.
பைக்கில் சென்று வாக்களித்த விஜயபாஸ்கர்.
Updated on
1 min read

மக்களிடம் தன்னெழுச்சியைக் காண முடிகிறது என, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், இலுப்பூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்குத் தன் மனைவியுடன் பைக்கில் சென்று முதல் ஆளாக வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் விஜயபாஸ்கர்.
வாக்களித்த பின்னர் விஜயபாஸ்கர்.

இதையடுத்து, விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டி, தொகுதி மக்களையும் மண்ணையும் வணங்கி வாக்குப்பதிவு செய்துள்ளேன். இறைவனின் அருளால் நிச்சயமாக, மக்களுடைய பேராதரவோடு வெற்றி பெறுவோம். கடுமையாகக் களத்தில் உழைத்துள்ளோம். அதிமுக தலைமையில் நல்லாட்சி அமையும்.

கோவிட் நெறிமுறைகளுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் நிறைவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. செய்த பணிகள் மக்களின் மனதில் நின்றதை நான் களத்தில் கண்கூடாகப் பார்த்தேன். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்டுச் செல்பவர்களுக்கும் எப்போதும் மக்களுடன் மக்களாகப் பயணித்தவர்களுக்குமான வித்தியாசத்தை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

மக்களோடு மக்களாகப் பயணித்த காரணத்தால், மக்களிடம் தன்னெழுச்சியைக் காண முடிகிறது. நான் போட்டியிடும் 4-வது தேர்தல் இது. 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் இல்லாத எழுச்சியை இந்தத் தொகுதியில் இப்போது பார்க்கிறேன். செய்த பணிகளை எண்ணி நிறைவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.

இன்று மாலை 7 மணிக்குப் பிறகே கரோனா தடுப்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவேன்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in