​​​​​​​'சர்கார்' பட பாணியில் வாக்கைச் செலுத்திய இளைஞர்;  திருச்சியில் ருசிகரம்

திருச்சியில் தேர்தல் விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்களித்த ரமேஷ்குமார்.
திருச்சியில் தேர்தல் விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்களித்த ரமேஷ்குமார்.
Updated on
1 min read

திருச்சியில் இளைஞர் ஒருவரது வாக்கை, வேறு யாரோ கள்ள வாக்காகச் செலுத்திவிட்டதால், அந்த இளைஞர் 'சர்கார்' பட பாணியில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்களித்தார்.

'சர்கார்' திரைப்படத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய், இந்தியா திரும்புவார். ஆனால் அவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட, இந்திய தேர்தல் நடத்தை விதியின் ‘49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, தனது வாக்குரிமையைப் பெறுவார். நோட்டாவின் சட்டப் பிரிவான 49 ஓ-வைபோல், 49 P இருப்பது 'சர்கார்' படத்துக்குப் பிறகே மக்களுக்கு பரவலாகத் தெரியவந்தது.

49 P சட்டப் பிரிவின்படி, ஒருவரது வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதுகுறித்துத் தேர்தல் அதிகாரியிடம் தெளிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17 B-யில் அந்த வாக்காளர் தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், திருச்சியிலும் அதேபோன்ற சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. அபுதாபியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரமேஷ்குமார் (34) என்ற இளைஞர், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை (பாகம் எண் 190, வரிசை எண் 990) செலுத்தச் சென்றார். அப்போது அவரது வாக்கை யாரோ கள்ள வாக்காகச் செலுத்திவிட்டது தெரிய வந்ததால், ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரிடம், தான் ரமேஷ்குமார் என்பதற்கான ஆவணங்களைக் காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கைச் செலுத்திச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in