

தமிழ்க் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் காப்பாற்ற நடக்கும் தேர்தல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அந்த வகையில் சிதம்பரத்தில் உள்ள கீரபாளையத்தில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, "இந்தத் தேர்தல் தமிழ்க் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் காப்பாற்ற நடக்கும் தேர்தல். பாஜக, ஆர்எஸ்எஸ் கலாச்சாரங்கள் மக்களின் ஒற்றுமைக்கு விரோதமானவை.
பாஜக வெளிப்படையாக சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்கிறது. பெரியாரிசத்தை அகற்றவே தமிழகத்தில் பாஜக போராடுவதாக அக்கட்சித் தலைவர் கூறுகிறார். இது முற்றிலும் தவறு. இன்று தமிழகத்தில் சமூக நீதியும், சமத்துவமும் இருக்கிறது என்றால் அந்தத் தூண்களை கட்டி எழுப்பியதில் தந்தை பெரியார் முதன்மையானவர்.
எனவே, தமிழக கலாச்சாரத்தை திமுக கூட்டணி காப்பாற்றும். இந்தக் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழகத்தின் வளர்ச்சிக்கான கூட்டணி. கொள்கையில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் விளங்குவார்” என்றார்.