

கரோனா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விருதுநகரில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8,13,542 ஆண் வாக்காளர்களும், 8,57,262 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 192 பேரும் என மொத்தம் 16,70,996 வாக்காளர்கள் உள்ளனர்.
7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 149 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் 968 மையங்களில் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9,480 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்போது கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நெருக்கமாக நின்று வாக்களிக்கச் சென்றனர். குறிப்பாக மல்லாங்கிணறு, வரலொட்டி மற்றும் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களில் பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியும் பலர் அதைப் பொருட்படுத்தவில்லை. மேலும் வாக்குச்சாவடி மையத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வாக்களிக்க நுழைந்ததால் அதிகாரிகள் திணறினர்.