

ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் மக்களிடம் இருப்பது நன்றாக புரிகிறது என, ப.சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினார்.
அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது. காரைக்குடி தொகுதியும் அந்த வழியிலே மிகப்பெரிய வெற்றியை தரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மக்களிடையே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது. அந்த ஆர்வமும் வேகமும் தேவையும் இந்த தேர்தலிலே பிரதிபலித்து, மே மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணும் போது, நாங்கள் சொன்னது உண்மை, நாங்கள் சொன்னது மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார்.