

கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி ராமேஸ்வரப்பட்டியை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று (ஏப். 6ம் தேதி) வாக்களித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”கரூர் தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. கரூரில் உதயசூரியன் சின்னத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவேன். இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதனை முடிவு செய்யும் தேர்தல். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார். எம்.பி. செ.ஜோதிமணி உடனிருந்தார்.
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆண்டாங்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரூர் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அதிமுக மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி சூடாமணி ஊராட்சி ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
கரூர் மாவட்டம் பெரியதிருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி வாக்களித்தார்.