

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8,13,542 ஆண் வாக்காளர்களும், 8,57,262 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 192 பேரும் என மொத்தம் 16,70,996 வாக்காளர்கள் உள்ளனர்.
7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 149 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் 968 மையங்களில் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. படையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9,480 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் காலை 7 மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தங்களது முதல் வாக்கைச் செலுத்த ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர்.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்குக் கையுறைகளும் வழங்கப்பட்டன. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் காத்திருந்து வாக்களித்தனர். மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, திருத்தங்கலில் உள்ள கலைமகள் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தில் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கைச் செலுத்தினார்.
முன்னாள் அமைச்சரும் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளருமான தங்கம் தென்னரசு மல்லாங்கிணற்றில் தனது வாக்கைச் செலுத்தினார். விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளர் சீனிவாசன் விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியிலும், பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் தனது குடும்பத்தினருடன் சென்று சூலக்கரையில் தங்களது வாக்கைச் செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் காலை 9 மணி வரை 7.35 சதவிகித வாக்குகளும், 11 மணி வரை 12.06 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன.