

தருமபுரி மாவட்டம் ஏரிமலை கிராம வாக்குச்சாவடியில் 4.30 மணிநேர தாமதத்துக்குப் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. கோட்டூர் மலை கிராமத்தில் வாக்காளர்கள் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்கள் கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை. கோட்டூர் மலை கிராமத்தில் 329 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, ஏரிமலை, அலகட்டு ஆகிய இரு மலை கிராமங்களில் 327 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 327 வாக்காளர்களுக்கும் ஏரிமலையில் வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ளது.
இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. எனவே, அடிவாரங்களில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் இந்த கிராமங்களுக்கு நடந்தே பயணிக்கும் நிலை உள்ளது. இந்த கிராமங்களுக்கு சாலை வசதி கேட்டு அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும், சாலை வசதி செய்து தரப்படவில்லை. மலை கிராமங்களில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக இந்த கிராம மக்கள் அறிவித்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், இன்று (ஏப். 06) காலை இந்த கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை.
கோட்டூர், ஏரிமலை வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதலே தேர்தல் பணி அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனாலும், 11.30 மணி வரை அங்குள்ள வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை. தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், வனச்சரகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கிராம மக்களின் எழுத்துப் பூர்வமான வாக்குறுதியை தொடர்ந்து ஏரிமலை, அலகட்டு மலை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்கச் சென்றனர்.
எனவே, ஏரிமலை வாக்குச் சாவடி மையத்தில் 4.30 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. அதேநேரம், கோட்டூர் மலை கிராம மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அங்குள்ள வாக்காளர்கள் இதுவரை தேர்தல் புறக்கணிப்பை தொடர்ந்து வருகின்றனர்.