

புதுச்சேரியில் காலை 11 மணிவரை 20.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப். 06) தொடங்கியது. வழக்கமாக தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் வரிசையில் நிற்பார்கள். பூத் ஸ்லிப் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு உடனடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தற்போது கரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவை வேகப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் வாக்குப்பதிவில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வெப்ப பரிசோதனை நடத்தி, கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர், வலது கைக்கு மட்டும் கையுறை வழங்கப்பட்டது.
காலை 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 20.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கூடுதலாக இரண்டு மணிநேரம் தரப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு கூடுதலாக வர வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் 19.92 சதவீதமும், காரைக்காலில் 20.7 சதவீதமும், மாஹேயில் 15.46 சதவீதமும், ஏனாமில் 24.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது. சராசரியாக 20.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.