2001 தேர்தல் முதல் கருத்துக்கணிப்புகள் சரியாக வருவதில்லை; வாக்களித்த பின் அன்புமணி விமர்சனம்

திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்.
திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்.
Updated on
1 min read

2001 தேர்தல் முதல் கருத்துக் கணிப்புகள் சரியாக வருவதில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அன்புமணி ராமதாஸ், தன் மனைவி சௌமியா மற்றும் குடும்பத்துடன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, ''நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கு தமிழகம் வெற்றி நடை போட எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும்.

கருத்துக் கணிப்புகள் தவறான முன்னுதாரணம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கருத்துக் கணிப்பு வெளியிடக்கூடாது. தமிழகத்தில் 6.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 30 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. இது 234 தொகுதிகளில் கணக்கிட்டால் 130, 140 பேரிடம் கருத்து கேட்கப்படுகிறது. இது விஞ்ஞானபூர்வமானது இல்லை.

கருத்துக் கேட்கப்படும் நபர்கள் யார் யார் எனவும் வெளியிடுவதில்லை. அவர்கள் விவசாயிகளா, அரசு ஊழியர்களா? முன்னேறியவர்களா? பின் தங்கியவர்களா? என எதுவுமே தெரியவில்லை.

ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தற்போது அரசியல் கட்சிகள், கட்சியைச் சார்ந்தவர்கள் ஊடகம் வைத்துக்கொண்டு தங்களுக்கேற்பக் கருத்துகளை உருவாக்கி வருகிறார்கள். 2001 தேர்தல் முதல் கருத்துக் கணிப்புகள் சரியாக வருவதில்லை'' என்று அன்புமணி தெரிவித்தார். அப்போது மயிலம் தொகுதி பாமக வேட்பாளர் சிவகுமார் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in