

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராவது உறுதி என்று தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அந்தவகையில் வேலுமணி தனது சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் வேலுமணி பேசும்போது, “2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெ.ஜெயலலிதாவின் அரசை மீண்டும் அமைத்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக ஆட்சி அமைப்பது உறுதி. மக்களிடையே உள்ள எழுச்சியைப் பார்க்கும்போது எளிய முதல்வரான எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.
மக்களுக்குத் தேவையான திட்டங்களை நாங்கள் அளித்திருக்கிறோம்.
நாங்கள் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது கண்ட எழுச்சியை தற்போது மக்களிடம் காண்கிறோம். எங்கெயும் தேர்தல் விதிமுறைகளை நாங்கள் மீறவில்லை” என்று தெரிவித்தார்.
தேர்தல் விதிமுறை மீறல் குறித்துக் கேட்டதற்கு, ''நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறோம். தமிழக எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் எங்களைக் குற்றம் சாட்டுகின்றன'' என்று தெரிவித்தார்.