முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

படங்கள் | எஸ்.குருபிரசாத்.
படங்கள் | எஸ்.குருபிரசாத்.
Updated on
2 min read

சேலம் எடப்பாடியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தனது மனைவி, மகன், மருமகள், பேரனுடன் வந்து வாக்களித்தார் முதல்வர் பழனிசாமி.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. காலையிலேயே தனது வாக்கை திமுக தலைவர் ஸ்டாலின் பதிவு செய்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி காலை சுமார் 10.30 மணி அளவில் தனது வீட்டருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களிக்க கிளம்பும் முன் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தனது தாயார் படத்திற்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள் பேரனுடன் வீட்டிலிருந்து நடந்தே சிலுவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்குச் சென்றார்.

வாயிலில் சானிடைசர் தெளித்தபின் வலது கையுறை வழங்கப்பட்டதை வாங்கி அணிந்துகொண்டு வரிசையில் சென்று நின்றார். அவருக்கு முன் சில பெண்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். அவர்கள் வாக்களித்தபின் தனது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து முதல்வர் வாக்களித்தார்.

அவர் வாக்களிக்க தனிப்பகுதிக்குச் செல்லும்போது தனது பேரனையும் உடன் அழைத்துச் சென்று வாக்களித்தார். வாக்களித்தபின் தனது பேரனைத் தூக்கிக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

முதல்வர் பழனிசாமி 1974-ல் அரசியலுக்கு வந்தார். 1989-ல் முதன்முறையாக ஜெயலலிதா அணியின் வேட்பாளராக எடப்பாடியில் நின்று வெற்றி பெற்றார்.

1991-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1996 மற்றும் 2006-ல் அதே தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில் அமைச்சராகப் பதவி ஏற்றார். 2016-லும் எடப்பாடியில் வென்று மீண்டும் அமைச்சர் ஆனார்.

2017-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு தொடர்கிறார். தற்போது மீண்டும் எடப்பாடியில் 7-வது முறையாகப் போட்டியிடுகிறார். 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டுமுறை திருச்செங்கோடு மக்களவை உறுப்பினராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்முறை முதல்வர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in