

புதுச்சேரியில் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முன்னுரிமை தரப்படுவதால் வாக்குப்பதிவில் காலதாமதம் ஏற்படுகிறது.
காலை 10 மணி நிலவரப்படி புதுச்சேரியில் வெறும் 16.9 சத வாக்குகள் பதிவாகியுள்ளது. இருப்பினும், கூடுதலாக இரண்டு மணி நேரம் தரப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு கூடுதல் சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வழக்கமாக தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் வரிசையில் நிற்பார்கள். பூத் சிலீப் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் அடையாளர் அட்டை சரிபார்க்கப்பட்டு உடனடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தற்போது கரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவை வேகப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் வாக்குப்பதிவில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வெப்ப பரிசோதனை நடத்தி, கிருமிநாசினி வழங்கப்பட்டது.
பின்னர் வலது கைக்கு மட்டும் கையுறை வழங்கப்பட்டது. அதனை வாக்காளர்கள் அணிந்துகொண்டு செல்வதற்கு சிறிது நேரம் காலதாமதம் ஆனது. இருப்பினும் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதால் கடந்தமுறை இருந்த தேர்தல் வாக்குசதவீதத்தை விட கூடுதலாக வாக்குப்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் வாக்குச்சாவடிகளால் பல வாக்குச்சாவடிகளில் குறைவான நபர்களே காத்திருந்தனர். சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்காளர்கள் வரிசையில் இருந்தனர். கிராமங்களிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. காலை 10 மணி நேர நிலவரப்படி புதுச்சேரியில் 16.9 சத வாக்குகள் பதிவானது.
புதுச்சேரி பிராந்தியத்தில் 17.9 சதவீதமும், காரைக்காலில் 16.97 சதவீதமும், மாஹேயில் 14.85 சதவீதமும், ஏனாமில் 14.98 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது.