

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. திண்டிவனம், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மரகாதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
தனது வாக்கை அளித்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
7வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளேன். நல்லாட்சியின் அடையாளம் என்பது மக்களின் முகத்தில் புன்னகை, மகிழ்ச்சி தெரியவேண்டும். அந்தவகையில் மக்கள் நிம்மதியாக உள்ளனர்.
உழவர்களின் பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படவேண்டும்.கல்வி செலவுகளை அரசே ஏற்கவேண்டும். சுகாதாரத்திற்கு ஒரு ரூபாய்கூட செலவிடக்கூடாது. நல்லாட்சி தொடரவேண்டும் என்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. கருத்துக்கணிப்புகள் கருத்து திணிப்புகளாக இருப்பதால் மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
விமர்சனங்கள் நாகரீகமாக, நயமாக, ரசிக்கதக்கவகையில் அமையவேண்டும். அண்ணாகாலம்வரை விமர்சனங்கள் நாகரீகமாக இருந்தது. இது தற்போது மாறி தனிநபர் தாக்குதலாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் அது தரம்தாழ்ந்துள்ளது. கட்சியின் கொள்கை, அதன் வழிமுறைகள், தேர்தல் அறிக்கைகளை விமர்சிக்கலாம்.
இதை இதை பேசவேண்டும். இதை இதை பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள் கோட்பாடுகள் வகுக்கவேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் பதிலளித்தார்.