

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்று நடைபெறும் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள், வாக்களிக்கும் தங்கள் உரிமையை - ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன.
இந்த 9 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 23,38,745 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 1,147 வாக்குப்பதிவு மையங்களில் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 156 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9 தொகுதிகளிலும் 1,490 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதிசெய்யும் 4,247 இயந்திரங்கள் நேற்றே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், இன்று காலை 5.40 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதிசெய்யும் இயந்திரங்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கிருமிநாசினி, கையுறை ஆகியவை வழங்கப்படுகின்றன.
திருச்சி கிராப்பட்டி தூய சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த எஸ்.சுவாதி கூறும்போது, "வாக்களிக்கும் எனது உரிமையை - ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
எஸ்.மார்க் செபஸ்டின் ராஜ் கூறும்போது, "நாடு இப்போது உள்ள நிலையில், நாம் அமைதியாக இருக்கக் கூடாது என்பதால் சமூக மாற்றத்துக்காக வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.