

மதவாத சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாதா கோயில் வீதியில் உள்ள சைமன் கர்தினால் லூர்துசாமி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மகள் டாக்டர் விஜயகுமாரியுடன் வந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
மதவாத சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறோம். மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, அரசுப் பணிகளை நிரப்புவோம், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவோம், மத்திய அரசின் மானியத்தை 40 சதவீதமாக உயர்த்துவோம் என மக்களை சந்தித்து வாக்கு கேட்டோம்.
அதே நேரத்தில் என். ஆர் காங்கிரஸ், பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாதக் கூட்டணி, இதனை வெளிக்காட்டும் வகையிலே அவர்கள் தனித்தனியாக பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அவர்கள் கட்சிக்காக மட்டுமே பிரசாரம் செய்தனர். கூட்டணிக்காக செய்யவில்லை. அதிகாரம், பணபலத்தை வைத்து பாஜக புதுச்சேரியில் காலூன்றப் பார்க்கிறது. பாஜக அடக்குமுறைகள், மிரட்டல்கள், வருமான வரித்துறை ஏவி திட்டமிட்டு வேட்பாளர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவதை செய்கிறார்கள்.
இந்த அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல மக்கள் மதசார்பற்ற அணியை அமோக வக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வைப்பார்கள் நம்பிக்கை இருக்கிறது.
மதவாதம், சாதிப் பிரிவினை தூண்டுபவர்களை மக்கள் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.