

புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் பெத்துசெட்டிபேட்டிலுள்ள பள்ளியில் முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 10.04 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் பெண்கள் 5.31 லட்சம் பேரும், ஆண்கள் 4.72 லட்சம் பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 116 பேர் உள்ளனர். இதில் 11,915 பேர் மாற்றுத்திறனாளிகள். 80 வயதுக்கு மேல் 17,041பேரும், புதிய வாக்காளர்கள் 31,864 பேரும் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர்களுக்கு நூறு சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது.
வாக்காளர் வசதிக்காக வாக்காளர் விவர சீட்டுகள் தரப்பட்டுள்ளன. ஆனால் வாக்களிக்க வரும்போது இந்த விவர சீட்டை அடையாள சான்றாக ஏற்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று எடுத்து வரவேண்டும்.
புதுச்சேரியில் உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இங்கு 1558 கன்ட்ரோல் யூனிட், 1677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்குகள் மட்டும் இடம் பெறும். இத்தேர்தலில் 1558 வாக்குச்சாவடிகள் 635 இடங்களில் அமைத்துள்ளோம். ஏனாம், மாஹே நீங்கலாக 28 தொகுதிகளில் மகளிர் கொண்டே செயல்படும் ஒருவாக்குச்சாவடி தொகுதி தோறும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு, வாழை மரம் கட்டப்பட்டு, சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு சுபநிகழ்வு வீட்டுக்கு வருவோரை போல் வரவேற்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக 6835 பேர் நியமிக்கப்பபட்டுள்ளனர். அதில் 2833 பெண் வாக்குச்சாவடி அலுவலர்களும், 719 மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர். பாதுகாப்பு பணியில் 2420 மாநில காவல்துறையினரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1490 ஊர்க்காவல் படையினரும் (ஆயிரம் பேர் கர்நாடகத்திலிருந்து வந்துள்ளனர்), மத்திய ஆயுத காவல் படையினர் 40 கம்பெனியும் வந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 27ம், காரைக்காலில் 6ம், மாஹேயில் 3ம், ஏனாமில் 4ம் பணியில் இருக்கின்றனர்.
புதுச்சேரியில் 330 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளன. அதில் புதுச்சேரியில் 278ம், காரைக்காலில் 30ம், மாஹேயில் 8ம், ஏனாமில் 14ம் உள்ளன. ஏனாமில் 16 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும். கண்காணிப்பு கேமிராக்கள் அனைத்து வாக்குச்சாவடியிலும் பொருத்தப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 21வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.