

தமிழகத்தில் தருமபுரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் 6, 7 தேதிகளில் கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.
திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல்காற்று வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பகல் 12 முதல் மாலை4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதம் வரை உள்ளதால் புழுக்கம்அதிகமாக இருக்கும்.
இதர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரைஉயரக்கூடும். தமிழகம் மற்றும்புதுச்சேரியில் 6 முதல் 8-ம்தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
9-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 5-ம் தேதி காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் 3 செமீ, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, ராசிபுரம், திருச்சி மாவட்டம் மருங்காபுரி, ராசிபுரம், நீலகிரி சாம்ராஜ் எஸ்டேட், கிணற்றுகோரை, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.