Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

வழக்கு தொடர்வதற்கான நீதிமன்றக் கட்டணம் உயர்வு- மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை

வழக்கு தொடர்வதற்கான நீதிமன்றக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியதை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான கே.வசந்த், சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

தமிழக அரசு கடந்த 2017-ம்ஆண்டு, நீதிமன்றத்தில் வழக்குதொடர்வதற்கான நீதிமன்றக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. உயர் நீதிமன்றங்களில் அரசுக்கு எதிராக தொடரப்படும் ரிட் வழக்குகளை தாக்கல் செய்ய, நீதிமன்ற கட்டணமாக முன்பு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டணத்தை ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இதேபோல ரிட் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்ய முன்பு ரூ.200 கட்டணமாக இருந்தது. தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரஅதிகபட்சமாக ரூ.500 மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் ரிட் வழக்கு தொடர ரூ.200 மட்டுமே கட்டணமாக உள்ளது.

ஆனால் தமிழகத்தில் நீதிமன்றக்கட்டணம் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தின் பலன் சாமானியர்களுக்கு தடையின்றி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே தமிழக அரசால் கடந்த 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நீதிமன்ற கட்டணம் மற்றும் வழக்குகள் மதிப்பீட்டுசட்டதிருத்தத்தை சட்டவிரோதம்என்று அறிவிக்க வேண்டும். முன்புஇருந்த கட்டணத்தையே வசூலிக்கஉயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘நீதிமன்றக் கட்டணத்தை உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் படியே கட்டணம் உயர்த்தப்பட்டது. இது அரசின்கொள்கை முடிவு என்பதால் இதில்நீதிமன்றம் தலையிட முடியாது’’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘நீதிமன்றக் கட்டணத்தை ரூ.1,000 மற்றும் ரூ.2,000 என அரசு உயர்த்தியுள்ளது. மேலும் இது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டு இருப்பதால், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்த கட்டண உயர்வை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.இந்த வழக்கு விசாரணையை ஏப்.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x