

வாக்குச்சாவடிகளுக்கு அருகே செல்லும் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி ஜே.கே.திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வாக்குச்சாவடிகளுக்கு அருகே வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என அனைவரையும் போலீஸார் சோதனை செய்ய வேண்டும். சந்தேக நபர்களை உடனே கைது செய்ய, ரோந்து காவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ரோந்து காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தொடர்ந்து ரோந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும்.
வாக்குச்சாவடி மையத்துக்குள் யாராவது பிரச்சினை செய்தால் மட்டுமே உள்ளே செல்லவேண்டும். தேவை ஏற்படாத பட்சத்தில் வாக்குச்சாவடிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். தேர்தல் முடியும் வரை பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி போன்ற எதற்கும் காவல் துறை அனுமதி வழங்க வேண்டாம். தடையை மீறி கூட்டம் கூடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடிகளை முழுமையாக பாதுகாக்கும் பொறுப்பு போலீஸாருக்கு உள்ளது.
இவ்வாறு டிஜிபி ஜே.கே.திரிபாதி அதில் தெரிவித்துள்ளார்.