குறைந்த விலை துவரம் பருப்பு ஒரே நாளில் 27 டன் விற்பனை: போதிய இருப்பு உள்ளதாக அதிகாரி தகவல்

குறைந்த விலை துவரம் பருப்பு ஒரே நாளில் 27 டன் விற்பனை: போதிய இருப்பு உள்ளதாக அதிகாரி தகவல்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அரசின் குறைந்த விலை இறக்குமதி துவரம் பருப்பு விற்பனை திட்டத்தின் கீழ், திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 91 விற்பனை நிலையங்களில் 27 டன் பருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடந்த மாதம் ஆயுதபூஜை யின் போது, வரலாறு காணாத வகையில் ரூ.225-ஐ எட்டியது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய 500 டன் முழு பருப்பை உடைத்து, மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நடத்தப்படும் தேர்வு செய்யப்பட்ட 91 விற்பனை நிலை யங்களில் கிலோ ரூ.110-க்கும், அரை கிலோ ரூ.55-க்கும் விற்பனை செய்யும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

அன்று அனைத்து விற்பனை நிலையங்களிலும், பருப்பு வாங்க அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். ஒரு நபருக்கு 1 கிலோ மட்டுமே பருப்பு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 91 விற்பனை நிலையங்களும் சேர்த்து 27 டன் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: முதல் நாளில் மட்டும் சென்னையில் உள்ள 56 விற்பனை நிலையங்களில் 15 ஆயிரத்து 628 கிலோ, கோயம்புத்தூரில் 10 கடைகளில் 2 ஆயிரத்து 843 கிலோ, திருச்சியில் 14 கடைகளில் 5 ஆயிரத்து 816 கிலோ, மதுரையில் 11 கடைகளில் 2 ஆயிரத்து 688 கிலோ என மொத்தம் 91 கடைகளில் 26 ஆயிரத்து 975 கிலோ (27 டன்) பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஒருசில கடைகளில் இருப்பு குறைந்ததைத் தொடர்ந்து, குடோன்களில் இருந்து உடனே கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டது. குறைந்தவிலை பருப்பு வியாபாரிகள் கைக்கு செல்வதை தடுக்கவும், அனைவருக்கும் சென்று சேரும் விதமாகவும், ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டும் வழங்கப்படுகிறது. அனைத்து கடைகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in