Published : 14 Nov 2015 03:31 PM
Last Updated : 14 Nov 2015 03:31 PM

பதக்கங்களை ராணுவ வீரர்கள் திரும்ப அளிப்பது ஏற்புடையதல்ல: பாதுகாப்புத் துறை அமைச்சர் கருத்து

தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை ராணுவ வீரர்கள் திரும்ப அளிப்பது ஏற்புடையது அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் கலந்துரையாட நேற்று வந்த அமைச்சர் மனோகர் பாரிக்கர், அங்குள்ள போர் நினைவுச் சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் 24 நாடுகளைச் சேர்ந்த 35 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இங்கு தரமான கல்வி, புதிய தொழில்நுட்பங்கள் மூலமாக திறமையான அதிகாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இலங்கை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை.

2014-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகளால் வட மாநிலங்களில் அமைதி திரும்பியுள்ளது. தீவிரவாத தாக்குதல்கள், உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதியான ராணுவத்தினருக்கு ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும். இதில் உள்ள குறைபாடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிருப்தியாளர்கள் முறையிடலாம். இதை தவிர்த்து, பதக்கங்களை எரிப்பது, திரும்ப அளிப்பது ஏற்புடையது அல்ல. இதுவரை, என்னிடம் யாரும் தங்கள் பதக்கங்களை திரும்ப அளிக்கவில்லை. பதக்கங்கள் சேவைக்காக அளிக்கப்படுவது.

முப்படைகளை நவீனப்படுத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீத உற்பத்தி அனுமதி உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு நவீனப்படுத்தும் பணிகள் நடக்கும். உள்நாட்டு உற்பத்திகளால் செலவும் குறைவதுடன், தன்னிறைவு பெற முடியும்.

முப்படைகளிலும் பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர். சில துறைகளில், அவர்களுக்குத் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்ட பின்னர் பணியமர்த்தப்படுவார்கள்.

ராணுவத்தில் இட ஒதுக்கீடு இல்லை. பி, சி பிரிவுகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்ட தேயிலையை ராணுவம் கொள்முதல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x