

சென்னையில் பொதுமக்கள் அச்ச மின்றி வாக்களிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் கவனித்து வருகின்றனர். பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், அச்சமின்றி வாக்களிக்கும்வகையிலும் துணை ராணுவப் படையினருடன் இணைந்து சென்னையில் தினமும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று மயிலாப்பூர், வில்லிவாக்கம் பகுதிகளில் இறுதிகட்ட காவல் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 327 பதற்றமான பகுதிகளில் 1,349 வாக்குச்சாவடி மையங்களும், மிகவும் பதற்றமான 10 பகுதிகளில் 30 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.
இங்கு போலீஸாருடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேவையற்ற முறையில் சுற்றித் திரிபவர்கள், அத்துமீறி கலகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உள்ளூர் போலீஸார், ஆயுதப்படை காவலர்கள் உட்பட 23,500 போலீஸாரும், 18 மத்திய காவல் படையினரும், 10 சிறப்பு காவல் படையினரும், 3,000 ஊர்காவல் படையினரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 1,800 ஊர்காவல் படையினரும், 700 ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் என சுமார் 30 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி மையத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். வேறு நபர்கள் நுழைந்தால் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங் களை கண்காணிக்க பிரத்யேக மாக ஒரு செல்போன் செயலிஉருவாக்கப்பட்டு கண்காணிக்கப் படுகிறது.
ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி உட்பட 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகரம் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார்.