Published : 21 Jun 2014 12:05 PM
Last Updated : 21 Jun 2014 12:05 PM

மத்தியில் ஆட்சி மாறினாலும், அணுகுமுறையில் மாற்றமில்லை: ரயில் கட்டண உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்

ஏழை மக்களின் சுமையைக் குறைக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்கவும் மத்திய அரசு ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்ததாகக் கூறப்படும் தவறுகள் சிலவற்றைக் களையப் போவதாக பா.ஜ.க. அரசின் புதிய பிரதமர் அறிவித்திருந்த போதிலும் அந்த அறிவிப்பினையொட்டி ஒரு சில மாற்றங்களுக்கான நடவடிக்கை எடுத்த போதிலும் - மத்திய அரசில் ஆட்சிக்கட்சி மாறினாலும், அணுகுமுறையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு சில அறிவிப்புகள் அமைந்து வருகின்றன.

உதாரணமாக இலங்கைக் கடற்படையினரின் தொடர் வன்முறைகள் - ராஜபக்ஷே அவர்களுடன் உறவு - தொடர்பு மொழிப் பிரச்சினை - டீசல் விலை உயர்வு என்ற இந்த வரிசையில் தற்போது பயணிகள் ரயில் கட்டண உயர்வு.

புதிய மத்திய அரசின் சார்பில் நிதி நிலை அறிக்கை வெளிவர தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.

அதையொட்டி ரெயில்வே பட்ஜெட்டும் வரவுள்ளது. இந்த நிலையில் அவசர அவசரமாக பயணிகள் ரெயில் கட்டணம் 14.2% அளவுக்கும், சரக்குக் கட்டணம் 6.5 சதவிகித அளவுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முடிவினை கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே எடுத்திருந்த நிலையில் அவர்களே அதனை நடைமுறைப்படுத்தாமல் விட்டு விட்டார்கள். இன்றைய ரெயில்வே துறை அமைச்சர் சதானந்த கௌடா பயணிகள் ரெயில் கட்டண உயர்வு பற்றிக் கூறுகையில், "முந்தைய அரசு கொண்டு வந்த கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டியதன் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். முந்தைய அரசின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஆணை விலக்கப்பட்டுள்ளதே தவிர, இது புதிய அரசின் முடிவல்ல" என்று தெரிவித்திருக்கிறார்.

முந்தைய அரசின் தவறான முன்னுதாரணங்கள் இந்த ஆட்சியில் நீக்கப்படும் என்று கூறித்தான் பா.ஜ.க. அரசு பதவியேற்றுள்ளது. டீசல் மானியம் படிப்படியாக அகற்றப்படலாம் - சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் மாதாந்திர விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்படலாம் -

யூரியா விலை உயர்த்தப்படலாம் - உணவுப் பாதுகாப்பு மசோதா மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றெல்லாம் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள இந்த நிலையில் நிதி நிலை அறிக்கை வெளியிடுவதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவசர அவசரமாக, அதுவும் 14.2 சதவிகித அளவுக்கு பயணிகள் ரயில் கட்டண உயர்வு அறிவித்திருப்பது சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

ரெயில் கட்டண உயர்வை, ஜெயலலிதா மட்டுமல்ல, நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்திருப்பதை மனதிலே கொண்டு புதிய பா.ஜ.க. அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்தவும் இந்த ரெயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கவேண்டும் - அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்". இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x