

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கருணை காட்டக்கூடாது. அவர்களுக்கு கடுமையான, உறுதியான தண்டனை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமியை, அவரது பக்கத்து வீட்டில் வசித்த பெருமாள் என்பவர் 1999-ல் வீட்டின் மாடிக்கு விளையாட அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து பெருமாளைக் கைது செய்தனர். இந்த வழக்கில் பெருமாளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி நீதிமன்றம் 28.3.2005-ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பெருமாள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதி பதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக, யூகங்களுக்கு இடமில்லா மல் உள்ளது. சிறுமியின் சாட்சியமும், அவரது தாயாரின் சாட்சியமும் முரண்படவில்லை. பாதிக்கப் பட்ட சிறுமி தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு சம்பவம் நடைபெற்று 24 நாட்களுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்றுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்பிறகு மனுதாரரின் பெயரைக் குறிப்பிட்டு போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதில் தவறு இல்லை.
உறுதியான தண்டனை
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோர் மீது கருணை காட்டக்கூடாது. அவர்களுக்கு கடுமையான, உறுதியான தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு கூடுதல் தண்டனை வழங்க அரசு தரப்பில் பரிந்துரை செய்யப் பட்டது. இருப்பினும், மனுதாரர் தண்டனை பெற்று 10 ஆண்டுக்குப் பிறகு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நேரத்தில் தண்டனையை மாற்றியமைப்பது சரியாக இருக் காது. எனவே, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப் படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.