

கும்பகோணம் மகாமக குளங்களின் பராமரிப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கும்பகோணத்தில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி மகாமகம் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தொகை சரிவர செலவிடப்படுகிறதா என் பதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலை மையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன் றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
இந்த வழக்கில் கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்:
மகாமக பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப் பட்டுள்ள குழுவில், சாமியார்கள், பக்தர்கள் இடம்பெற்றுள்ளனரா?
மகாமகம் குறித்த பரிந்துரைகள், புகார்களைப் பரிசீலிக்க வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா?
44 குளங்கள் பராமரிப்பு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவை ஏன் சீல் வைக்கப்படவில்லை?
இந்த வினாக்களுக்கு இரண்டு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்தவரும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவருமான இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைச் செயலாளர் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும். வரும் 10-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்