பார்சலில் கடிகாரங்களை வைத்து நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சரண்

பார்சலில் கடிகாரங்களை வைத்து நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சரண்
Updated on
2 min read

பார்சலில் கடிகாரங்களை வைத்து உயர் நீதிமன்றம் உட்பட பல இடங்களுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் போலீஸில் சரண் அடைந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வணிக வளாகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல், பூந்தமல்லி சென்ற மாநகர பேருந்து ஆகியவற்றில் கடந்த வாரம் அடுத்தடுத்த தினங்களில் மர்ம பார்சல்கள் கிடந்தன. மக்கள் அளித்த புகார்களின் பேரில் போலீஸார் பார்சல்களை கைப்பற்றி சோதனை நடத்த, அதற்குள் சாதாரண கடிகாரங்கள் இருந்தன.

மேலும் அவற்றுடன் இருந்த கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில், “நீதிமன்றங்களில் ஊழல் அதிகரித்துவிட்டது. சிறைகளில் சரியான உணவு கொடுப்பதில்லை. அங்கும் லஞ்சம் பெருகிவிட்டது. மாநகராட்சியும் சரியில்லை. பணம் கொடுத்தால் மட்டும்தான் குப்பைகளை அள்ளுகின்றனர். இதையெல்லாம் சீக்கிரம் சரி செய்யுங்கள். இல்லையென்றால் குண்டு வெடிக்கும்" என கூறப்பட்டிருந்தது.

போலீஸில் சரண்

கைப்பற்றப்பட்ட அனைத்து பார்சல்களும் ஒரே மாதிரி இருந்ததால் அவற்றை யாரோ ஒருவர் அல்லது ஒரே அமைப்பினர்தான் தொடர்ந்து அனுப்புகின்றனர் என்பது தெரிந்தது. ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு நேற்று மதியம் ஒருவர் சென்று “கடிகார பார்சல்களை வைத்து வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது நான்தான். என்னை கைது செய்யுங்கள்” என்று கூறினார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சேத்துப்பட்டை சேர்ந்த பாபு என்பது தெரிந்தது.

சுவர் ஏறி குதித்தேன்

பின்னர் போலீஸிடம் பாபு அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:

போலீஸார் என்னை பலமுறை கைது செய்துள்ளனர். அந்த வழக்குகளில் இருந்து வெளியே வருவதற்கு அதிக பணம் தேவைப்பட்டது. அதற்காகவே குற்றங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், மாநகர பேருந்து போன்ற வற்றில் மிக எளிதாக மிரட்டல் பார்சல்களை வைத்துவிட்டேன். நீதிமன்றத்துக்குள் மர்ம பார்சலை கொண்டு செல்லத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். கடந்த 28-ம் தேதி இரவு எனது வழக்கறிஞர் நண்பர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, நான் பின்னால் அமர்ந்து கொண்டேன். அவர் நீதிமன்றத்துக்குள் வண்டியுடன் நுழைய நானும் உடன் சென்று மர்ம பார்சலை போட்டுவிட்டு வந்தேன். மற்றொரு முறை சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து கடிகார பார்சலை போட்டுவிட்டு வந்தேன்.

செய்திகளை பார்த்து சிரிப்பேன்

போலீஸாரை அலைய விட வேண் டும் என்றுதான் முதலில் செய்தேன். இதேபோல உண்மையான தீவிரவாதிகள் வந்து குண்டு வைத்தால் நம் போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிய வைக்கத்தான் அடுத்தடுத்து கடிகார மர்ம பார்சல்களை வைத்தேன். ஒவ்வொரு நாள் பார்சலை போட்டுவிட்டு, மறுநாள் காலையில் பத்திரிகைகளை வாங்கி அதில் வந்த செய்திகளை பார்த்தும், போலீஸாரை நினைத்தும் சிரித்தேன் என்று பாபு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பதிவேடு குற்றவாளி

“பாபு மீது அம்பத்தூர், துரைப்பாக்கம், சேத்துப்பட்டு உட்பட சில காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். போலீஸ் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் பாபுவின் பெயரும் உள்ளது” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in