

மதுரை வண்டியூர் பூங்காவில் அத்துமீறும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரிடம் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபாவிடம், அண்ணாநகர் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், ராஜேஸ்வரி, ஜெயா, அர்ச்சனாதேவி, வாசுகி, யோக நந்தினி, சீதா லட்சுமி, கார்த்திகா ஆகியோர் அளித்த புகார் மனு:
மதுரை வண்டியூர் பூங்காவில் தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்த செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் பக்கத்துக்கு ஊர்களை சேர்ந்தவர்கள்.
காதலர்கள் போல் வரும் இவர்கள் மரங்கள், செடி, கொடிகளுக்கு பின்னால் மறைந்திருந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த பூங்காவில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெற தினமும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பெற்றோருடன் பூங்காவுக்கு வருகின்றனர். காதல் ஜோடிகளின் செயல்கள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற வரும் சிறுவர், சிறுமியர்களின் மனதை கெடுக்கிறது.
எனவே, பூங்காவுக்கு வரும் காதலர்களுக்கு கட்டுப்பாடு விதித்து, அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து ஆலோசனை வழங்கவும், ஆசை வார்த்தை கூறி பெண்களை அழைத்து வந்து தவறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மதுரை மாவட்ட காவல் ஆணையர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு நீதிபதி தீபா அனுப்பினார்.