Last Updated : 05 Apr, 2021 06:34 PM

 

Published : 05 Apr 2021 06:34 PM
Last Updated : 05 Apr 2021 06:34 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 16  சிறப்பு வாக்குச்சாவடிகள்: ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 16 சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்று கொண்டு செல்லப்பட்டன. இப்பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தேர்தல் காவல் பார்வையாளர் அவினாஷ்குமார் ஆகியோரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறியதாவது:

‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. வாணியம்பாடி தொகுதியில் 361 வாக்குச்சாவடிகள், ஆம்பூர் தொகுதியில் 335 வாக்குச்சாவடிகள், ஜோலர்பேட்டை தொகுதியில் 340 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் தொகுதியில் 335 என மொத்தம் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் 4 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் 13 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் 6,032 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தாலுகாவிலும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, வாணியம்பாடி தொகுதிக்கு 1,338 இயந்திரங்கள், ஆம்பூர் தொகுதிக்கு 1,240 இயந்திரங்கள், ஜோலார்பேட்டை தொகுதிக்கு 1,258 இயந்திரங்கள், திருப்பத்தூர் தொகுதிக்கு 1,240 இயந்திரங்கள் என மொத்தம் 5,076 இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலங்களில் இருந்து சுமார் 500 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4 தொகுதிகளில், மத்திய பாதுகாப்பு படையினர், காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர் காவல் படையினர் என மொத்தம் 2,800 பேர் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து இன்று வரை மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக்குழுவினர் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 154 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நுண்பார்வையாளர்கள், கூடுதல் காவலர்கள் கண்காணிப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். அதேநேரத்தில் 820 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிகளிலும் கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் தலா ஒரு சிறப்பு வாக்குச்சாவடியும், பெண்கள் வாக்குச்சாவடி என 16 சிறப்பு வாக்குச்சாவடிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடத்த தயாராக உள்ளோம். பொதுமக்கள் தங்களது வாக்குகளை 100 சதவீதம் செலுத்த முன்வர வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், லட்சுமி (ஜோலார்பேட்டை), காயத்ரிசுப்பிரமணி(வாணியம்பாடி), கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்), தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள், மோகன், அனந்தகிருஷ்ணன், சுமதி, சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x