Published : 05 Apr 2021 06:24 PM
Last Updated : 05 Apr 2021 06:24 PM

வாக்கை யாராவது முன்பே போட்டிருந்தால் என்ன செய்வது; வேறு சின்னத்தில் வாக்குப் பதிவானால் என்ன செய்வது?- தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை

நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய செல்லும்போது அவர்கள் வாக்கை யாராவது முன்பே போட்டிருந்தால் என்ன செய்வது, நாம் அளிக்கும் வாக்கு வேறு சின்னத்தில் பதிவானால் என்ன செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

நாளை சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 234 தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் வாக்காளர்களுக்கு உள்ள பல சந்தேகங்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று விளக்கம் அளித்தார். அதில் முக்கியமானது நமது வாக்கை வேறு யாரும் செலுத்திவிட்டால் நாம் என்ன செய்வது, டெண்டர் வாக்கை எப்படி பதிவு செய்வது.

அதேப்போன்று வாக்களிப்பவர் என்ன சின்னத்துக்கு வாக்களித்தார் என்பதை விவிபேட் இயந்திரம் காட்டும். அவ்வாறு காட்டும்போது வேறு சின்னத்துக்கு வாக்களிக்கப்பட்டதாக காண்பித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தேர்தல் அதிகாரி சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

வாக்குப்பதிவு அன்று ஊழியர்களுக்கு தனியார் ஊழியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு விடுப்பு அளித்து சம்பளம் அளிக்க வேண்டும் இது தேர்தல் ஆணைய உத்தரவு. 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும் தேர்தல் நடத்தை விதி தொடரும்.

நமது வாக்கை வேறொருவர் போட்டிருந்தால் டெண்டர் வாக்கு அளிப்பது எப்படி?

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்ன்று வாக்களிக்கும்போது அவரது வாக்கை ஏற்கெனவே யாராவது போட்டிருந்தால் வாக்காளர் அங்குள்ள வாக்குப்பதிவு அதிகாரியிடம் அதற்குரிய படிவத்தை வாங்கி தனது அடையாளத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம். அவரது வாக்கை சீலிட்ட கவரில் அதிகாரி பெற்றுக்கொள்வார்.

நமது வாக்கு வேறு சின்னத்தில் பதிவானதாக விவிபேட் இயந்திரம் காட்டினால் என்ன செய்வது?

வாக்களிக்கும் போது வாக்காளர்கள் வாக்களித்த சின்னம் இல்லாமல் வேறு சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டதாக உணர்ந்தால் உடனடியாக புகார் அளித்தால் வாக்குப்பதிவு அதிகாரி புகார் அளித்த வாக்காளரிடம் புகாரைப் பெற்று, வாக்காளரிடம் ஒரு மனுவை கொடுத்து, சத்திய பிரமாணம் போன்று தான் கூறிய தகவல் உண்மைதான் என்ற புகாரை பெறுவார்.

புகாரைப்பெற்றப்பின் வாக்குப்பதிவு அதிகாரி வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை அழைத்து அவர்கள் முன்பு ஒரு வாக்கை பதிவு செய்வார். இதில் வாக்காளர் தவறான தகவல் அளித்திருந்தது கண்டறியப்பட்டால் அவருக்கு ஆறுமாதம் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x