

காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்று(ஏப்.5) அனுப்பி வைக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்டத்தில் 234 வாக்குச் சாவடிகளில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை(ஏப்.6) நடைபெறுகிறது.
இதனையொட்டி காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், கலைஞர் மு.கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. காவல் துறையினர் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச் சாவடி அலுவலர்களும், வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா, துணைத் தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எம்.ஆதர்ஷ், எஸ்.சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் ஆட்சியர் கூறியது: மாவட்டத்தில் 33 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் இணைய வழியில் கண்காணிக்கப்படும் என்றார்.