

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கச் செல்ல அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் அடங்கிய வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. அந்தந்தத் தொகுதிகளில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
உதகை பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உதகை சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்களை மத்திய தேர்தல் பார்வையாளர் பனுதர் பெஹரா, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ''மூன்று தொகுதிகளிலும் 83 மண்டலங்களில் 5,700 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குபதிவு இயந்திரங்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படும். தெங்குமரஹாடா, கரிக்கையூர், கிண்ணக்கொரை கிராமங்கள் தொலைதூரத்தில் உள்ளதால், அப்பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காலையிலேயே அனுப்பப்பட்டன'' என்று தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
தேர்தல் பாதுகாப்புப் பணியில் 450 மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் 1,806 போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்க செல்ல அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் அடங்கிய வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.