Last Updated : 05 Apr, 2021 04:17 PM

 

Published : 05 Apr 2021 04:17 PM
Last Updated : 05 Apr 2021 04:17 PM

பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடிகள்; சமூக இடைவெளிக்காக அடையாளக் குறியீடு

மாநிலம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, கோவை சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகளை, தேர்தல் பிரிவு ஊழியர்கள் இன்று தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (6-ம் தேதி ) நடக்க உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 413 வாக்குச்சாவடிகள், சூலூர் தொகுதியில் 463 வாக்குச்சாவடிகள், கவுண்டம்பாளையம் தொகுதியில் 676 வாக்குச்சாவடிகள், கோவை வடக்குத் தொகுதியில் 499 வாக்குச்சாவடிகள், தொண்டாமுத்தூர் தொகுதியில் 471 வாக்குச்சாவடிகள், கோவை தெற்கு தொகுதியில் 359 வாக்குச்சாவடிகள், சிங்காநல்லூர் தொகுதியில் 449 வாக்குச்சாவடிகள், கிணத்துக்கடவு தொகுதியில் 485 வாக்குச்சாவடிகள், பொள்ளாச்சி தொகுதியில் 318 வாக்குச்சாவடிகள், வால்பாறை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வாக்குப்பதிவு நாளை நடப்பதையொட்டி, வாக்குச்சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகளை மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ''வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 22 வகையான ஸ்டேஷனரி பொருட்கள், 25 வகையான கவர்கள், 15 வகையான படிவங்கள், 10 வகையான அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றைப் பிரித்து அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் உட்புறப் பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் டேபிள் வைத்தல், மறைப்புப் பகுதியை ஏற்படுத்துதல், வாக்குச்சாவடி மைய ஊழியர்களின் பணிக்கான மேசை, இருக்கைகள் அமைத்தல், முகவர்களுக்கான இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா அச்சத்தால் வாக்காளர்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் அடையாளக் குறியீடுகள் ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையான இடங்களில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க சாமியான பந்தல் போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில மையங்கள் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பெண் ஊழியர்கள் மட்டுமே பணிபுரியும் 10 வாக்குச்சாவடிகள், ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x