Last Updated : 05 Apr, 2021 03:06 PM

 

Published : 05 Apr 2021 03:06 PM
Last Updated : 05 Apr 2021 03:06 PM

புதுக்கோட்டையில் ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட, ரூ.10 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரச்சாரத்தின்போது அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுதல், கொடி கட்டுதல், பட்டாசு வெடித்தல், தகராறு செய்தல், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பேரணி போன்ற தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டோர் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் மு.ராஜநாயகம், ஆவுடையார்கோவில் அருகே மாவடிகோட்டையைச் சேர்ந்த ராமசாமி மகன் தங்கராசு(21) ஆகியோர் மீது மணமேல்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கராசைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 500 பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

திருமயம் மற்றும் பொன்னமராவதியில் அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியது, பட்டாசு வெடித்ததாகத் திருமயம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து மீது திருமயம் மற்றும் பொன்னமராவதி ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி இரு சக்கர வாகனப் பேரணி நடத்தியதாக விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் மீது அன்னவாசல் காவல் நிலையத்திலும், திருமயம் அமமுக வேட்பாளர் முனியரசு மீது திருமயம் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக அதிமுக கூட்டணியில் 75 வழக்குகள், திமுக கூட்டணியில் 65 வழக்குகள், அமமுக கூட்டணியில் 14 வழக்குகள் உட்பட மொத்தம் 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாகத் திருமயம் தொகுதியில் 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் 48, அறந்தாங்கியில் 44, விராலிமலையில் 24, கந்தர்வக்கோட்டையில் 14, ஆலங்குடியில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.78 லட்சத்து 34 ஆயிரத்து 589 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, தங்கம், வெள்ளி பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சேலை, பொங்கல் பானைகள் என ரூ.9 கோடியே 22 லட்சத்து 65 ஆயிரத்து 285 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் ரூ.10 கோடியிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x