

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் போதைமலையில் கரடு முரடான பாதையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் போதைமலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு உட்பட்ட பகுதியில் கீழூர் மற்றும் கெடமலை ஆகிய இரு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இரு வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 902 வாக்குகள் உள்ளன.
ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமம் இந்த மலையின் அடிவாரப் பகுதியாகும். இங்கிருந்து மேற்குறிப்பிட்ட இரு வாக்குச்சாவடிகளுக்கு செல்ல போதிய சாலை வசதி கிடையாது. எனவே, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைச்சுமையாக கொண்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில், இம்முறையும் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக இன்று (ஏப். 05) காலை 9 மணியளவில் தேர்தல் மண்டல அலுவலர் தலைமையில் 24 பணியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாடு இயந்திரம், விவிபேட் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை தலைச்சுமையாக கீழூர் மற்றும் கெடமலை ஆகிய இரு வாக்குச்சாவடிகளுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் கொண்டு சென்றனர்.