Published : 05 Apr 2021 12:52 PM
Last Updated : 05 Apr 2021 12:52 PM

திமுக பணம் விநியோகித்ததாக புகார்; கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு

கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் திமுகவினர் பணம் விநியோகித்ததாக கூறி, அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என, அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப். 06) நடைபெற உள்ளது. நேற்று (ஏப். 04) மாலை 7 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.

இந்நிலையில், கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் திமுகவினர் பணம் விநியோகித்ததாக கூறி, அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என, அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் இன்று (ஏப். 05) வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனுவை அளித்தபின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் திமுக பணம் விநியோகித்துள்ளது. திமுக நவீன முறையில் ஊழல் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் மிக மிக கைதேர்ந்தவர்கள் என்பது சர்க்காரியா கமிஷன் மூலம் நமக்கு தெரியும்.

வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று 'கூகுள் பே' மூலமாக, வாக்காளர்களின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புகின்றனர். குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுக்களையும் அழைத்து ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் பணம் விநியோகித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இந்த ஜனநாயக கேலிக்கூத்து அரங்கேறியிருக்கிறது. குறிப்பாக, இந்த 5 தொகுதிகளில் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். 2 ஜி ஊழலில் வந்த பணம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களிடம் உள்ளது. எனவே, அந்த பணத்தை வைத்து, செயற்கையான வெற்றியை பெற நினைக்கின்றனர்.

இந்த 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வெண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று விஷம பிரச்சாரத்தை செய்துவருகிறது. தேர்தலுக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதி. அதனை நாங்கள் மதிக்கிறோம். தேர்தல் விதிமுறைகளை மீறி அத்தொலைக்காட்சியில் திமுக ஆதரவு விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x