

ஏனாமில் மாயமான சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்.
தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இரு தொகுதியில் போட்டியிடுகிறார். அதில், ஏனாமும் ஒன்று. அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், ஏனாமில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை.
இந்நிலையில், அங்கு சுயேட்சையாக போட்டியிட பொம்மடி துர்காபிரசாத் என்பவவர், மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் அவரை காணவில்லை. இதனால் அவரின் மனைவி தனது கணவரை காணவில்லை என போலீஸில் புகார் செய்தார். தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங்கும், "போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அவர் மாயமானதால் தேர்தலுக்கு பாதிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
போலீஸார் கோதாவரி ஆற்று பகுதியின் தீவுகளில் தீவிரமாக அவரை தேடினர். அப்போது ஆற்றிலுள்ள ஒரு தீவில் அவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை நேற்று (ஏப். 04) இரவு மீட்ட போலீஸார், மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவும் அவரது வாக்குமூலம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.