Published : 05 Apr 2021 12:24 PM
Last Updated : 05 Apr 2021 12:24 PM

தமிழகத்தில் நாளை தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

சென்னை

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இதனுடன் விவிபேட் இயந்திரங்களும் கொண்டுச் செல்லப்பட உள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளைக் காலை தொடங்க உள்ளது. தமிழகத்தில் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையில் நான்கு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும். இந்நிலையில் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் எனும் மையத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த வாரம் முழுவதும் வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் பொறிக்கும் பணி நடந்து முடிந்தது. பின்னர் அவைகள் தொகுதி, பாக வாரியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் இன்று அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம்) ஆகியவை தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணிக்கு 300 துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்தத் தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18, 28,727 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் இன்று மாலைக்குள் 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் அனுப்பப்பட்டு விடும். நாளை காலைக்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x