

மகாராஷ்டிராவைப் போலத் தமிழக நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''ஒட்டுமொத்தமாக 6-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு என்பதை மக்கள் நம்பக் கூடாது. அதே நேரத்தில், மக்களும் நோய்த்தன்மை அதிகமாகி வருவதை உணர வேண்டும். மகாராஷ்டிராவைப் போலத் தமிழக நிலைமை கையை மீறி சென்றுவிடக் கூடாது. தேவைக்கேற்ப மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், அவர்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக சில நடவடிக்கைகளை எடுக்கப்படும். கல்யாணம், இறப்பு, கலாச்சார நிகழ்வுகளில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றிப் பொது இடங்களுக்குச் செல்வதைக் கட்டாயம் நிறுத்த வேண்டும். திருச்சியில் ஒரே குடியிருப்பில் 14 பேருக்குக் கரோனா ஏற்பட்டுள்ளது.
வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் தேவையற்ற பயணங்களைப் படிப்படியாகக் குறைக்கும் வகையில் கொள்கை ரீதியாக முடிவெடுக்கப்படும். அதே நேரத்தில் மக்கள் பதற்றமடைய வேண்டாம்.
நோய் அறிகுறி வரும்போது 3, 4 நாட்களுக்குப் பிறகு 108-க்கு போன் செய்கிறார்கள். இது தவறு, உடனடியாக அவர்கள் மருத்துவமனை செல்ல வேண்டும். சென்னை முழுவதும் கிங்ஸ் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார், கேஎம்சி, எம்எம்சி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான மக்கள், கரோனா தொற்று என்றாலே கிங்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவிடுகின்றனர். ஆரம்பகட்டத் தொற்று உள்ளவர்கள் கரோனா பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்லக்கூடாது. நோய் அறிகுறியே இல்லாதவர்கள் முழு அறிகுறி உள்ளவர்களோடு சேர்ந்து இருக்கக்கூடாது.
கரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற வேண்டியதில்லை. அதே நேரத்தில் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்க வேண்டும்''.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.