

புதுச்சேரி சடட்ப்பேரவைக்கு நாளை ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புயம் பணி இன்று காலை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் 30 தொகுதிகளில் உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் இங்கு 1558 கன்ட்ரோல் யூனிட், 1677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதர 28 தொகுதிகளில் ஒரு வாக்குப்பபதிவு இயந்திரம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.
கரோனாவையொட்டி ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்குகள் மட்டும் இடம் பெறும். இத்தேர்தலில் 1558 வாக்குச்சாவடிகள் 635 இடங்களில் அமைத்துள்ளோம். ஏனாம், மாஹே நீங்கலாக 28 தொகுதிகளில் மகளிர் கொண்டே செயல்படும் ஒருவாக்குச்சாவடி தொகுதிதோறும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை வாக்குப்பதிவை ஒட்டி ஸ்ட்ராங் ரூமில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் அரசு தொழில்நுட்ப கல்லூரியிலிருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி காலை தொடங்கியது.
பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டன.
இது தொடர்பாக தேர்தல் துறை கூறுகையில், "தேர்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக 6835 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 2833 பெண் வாக்குச்சாவடி அலுவலர்களும், 719 மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர். பாதுகாப்புப் பணியில் 2420 மாநில காவல்துறையினரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1490 ஊர்க்காவல் படையினரும் (ஆயிரம் பேர் கர்நாடகத்திலிருந்து வந்துள்ளனர்), மத்திய ஆயுத காவல் படையினர் 40 கம்பெனியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரியில் 27 கம்பெனியும், காரைக்காலில் , மாஹேயில் 3, ஏனாமில் 4 கம்பெனியும் பணியில் இருப்பார்கள்.
புதுச்சேரியில் 330 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளன. அதில் புதுச்சேரியில் 278ம், காரைக்காலில் 30ம், மாஹேயில் 8ம், ஏனாமில் 14ம் உள்ளன.
ஏனாமில் 16 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும். கண்காணிப்பு கேமிராக்கள் அனைத்து வாக்குச்சாவடியிலும் பொருத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.