Published : 05 Apr 2021 06:21 AM
Last Updated : 05 Apr 2021 06:21 AM

களத்தில் 16 வேட்பாளர்கள்: எழும்பூரை கைப்பற்ற திமுக - அதிமுக கடும் போட்டி

எழும்பூர் (தனி) தொகுதியில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. சென்னையின் முக்கியப் பகுதியான எழும்பூர் (தனி) தொகுதி இதுவரை 14 சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் திமுக 10 முறை, காங்கிரஸ் 2 முறை, தேமுதிக மற்றும் சுயேச்சை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக, மறைந்த பரிதிஇளம்வழுதி, திமுக சார்பில் போட்டியிட்டு 5 முறை இத்தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார். இதுவரை பெற்ற வெற்றிகளின் அடிப்படையில், இது திமுகவுக்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்படுகிறது.

இம்முறை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் இ.பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். அதிமுக கூட்டணியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் பெ.ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 2001-ம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிட்டு 86 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதுதவிர தேமுதிக சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் கீதாலட்சுமி, மநீம சார்பில் பிரியதர்ஷினி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 16 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால், அவர்கள் வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கை

யில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளை கூறி அக்கட்சியின் வேட்பாளர் இ.பரந்தாமன் வாக்கு சேகரித்து வருகிறார். மறு
புறம், இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் முனைப்பில் ஜான் பாண்டியன், சுகாதாரமான குடிநீர் விநியோகம் உட்பட தொகுதியின் முக்கியபிரச்சினைகளை சரிசெய்யும் விதமாக 12 அம்ச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

தேமுதிக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபு போட்டியிடுகிறார். இவர்ஏற்கெனவே 2016 சட்டப்பேரவை தேர்தலில் இதே எழும்பூர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக சார்பில்போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் கீதாலட்சுமி போட்டியிடுகிறார். தொகுதியில் இவர்கள் பெரிய அளவில் பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பிரியதர்ஷினி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். வாக்கு சேகரிப்பின்போது, மக்களுக்கு நெருக்கமானவராக காட்டிக்கொள்ளும் விதமாக, வாக்காளர்களின் வீடுகளுக்குள் சென்று உணவு சமைக்கிறார். இளைஞர்களுடன் இறகுப் பந்து விளையாடுகிறார்.

கள நிலவரத்தின்படி, எழும்பூர் (தனி) தொகுதியில் திமுக - அதிமுக இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x