

அண்ணாநகர் தொகுதியை தக்கவைப்பதற்கான பணிகளில் திமுகவினரும், தட்டிப் பறிப்பதற்கான முயற்சிகளில் அதிமுகவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சினிமா பிரபலங்கள் என விஐபிக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி அண்ணாநகர். இத்தொகுதியில் மறைந்த திமுகதலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி 1977, 1980-ல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக 8 முறையும், காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2016 தேர்தலில் திமுக வேட்பாளரான தொழிலதிபர் எம்.கே.மோகன், 1,687 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திராவை வென்றார். தற்போதையசட்டப்பேரவை தேர்தலிலும் திமுக சார்பில் மோகனும், அதிமுக சார்பில் கோகுல இந்திராவும் களத்தில் உள்ளனர். இந்தஇருவரைத் தவிர்த்து, அமமுகசார்பில் கே.என்.குணசேகரன்,
மநீம சார்பில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், நாம் தமிழர் கட்சிசார்பில் சங்கர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜீவித்குமார் என மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக எம்எல்ஏ-வான எம்.கே.மோகன், தனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு பணிகளை தொகுதிக்காக செய்து கொடுத்திருப்பதும், இங்கு ஏற்கெனவே பலமுறை திமுக வெற்றிபெற்றிருப்பதும் அக்கட்சிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஏற்கெனவே இந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக பதவி வகித்து, கடந்தமுறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மோகனிடம் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா, தொகுதியை மீண்டும் தட்டிப்பறிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
போக்குவரத்து நெரிசல், மழை, வெள்ள பாதிப்பு, அரசு கலைக் கல்லூரி இல்லாதது போன்றவை இத்தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தின் பெரும் பகுதி அண்ணா நகர் தொகுதிக்குள் வருகிறது. நெல்சன் மாணிக்கம் சாலையில் இரட்டை மேம்பாலம் என்ற வாக்குறுதி இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,78,028. இதில் ஆண்வாக்காளர்கள் 1,36,698. பெண் வாக்காளர்கள் 1,41,249. மூன்
றாம் பாலினத்தவர்கள் 81 பேர்.
இந்தமுறை இந்த தொகுதியைமீண்டும் தக்க வைக்கும் முனைப்புடன் திமுகவும், அதை மீண்டும் ஒருமுறை தட்டிப்பறிக்கும் முயற்சியில் அதிமுகவும் களமிறங்கியுள்ளதால் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவின் வாக்குகளை அமமுகவும், திமுகவின் வாக்குகளை மநீம மற்றும் நாம் தமிழர் கட்சியும் பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அதிமுக
வும், திமுகவும் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.