Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்; தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரச்சாரம் ஓய்ந்தது: ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு-பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படைகள்

தேர்தல் பணிக்காக வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவைப்படும் பொருட்களை சாக்கு பையில் போட்டு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அலுவலர்கள். இடம்: திருவல்லிக்கேணி என்.கே.டி பள்ளி.படம்: க.ஸ்ரீபரத்

சென்னை / புதுச்சேரி / திருவனந்தபுரம்

தமிழகத்தில் நேற்று இரவு 7 மணி யுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதை முன்னிட்டு, நேற்று இரவு 7 மணியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரம் ஓய்ந்தது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல் முறையாக தற்போது இரவு 7 மணி வரை இறுதி பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதித்திருந்தது. இதற்கு முன்பு வரை மாலை 5 மணி வரை மட்டுமே இறுதிக்கட்ட பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நிறைவு நாள் வாக்குசேகரிப்பையொட்டி நேற்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை ஆதரித்தும் பின்னர் துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர் உள்ளிட்ட தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இரவு 7 மணியை நெருங்கும் வேளையில், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சாலைகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்து, பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மாநிலம் முழுவதும் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி பிரச்சாரம் மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தொகுதிக்கு தொடர்பில்லாத கட்சி நிர்வாகிகள், வாக்காளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டது.

திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா எனவும் போலீஸார் சோதனை நடத்தினர். பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் அங்கீகாரம், வாகன அனுமதிகள் என அனைத்தும் நேற்று இரவு 7 மணி முதல் செல்லாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், இன்று காலை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பிரத்யேக இடத்தில் வாக்குச் சாவடி அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேவையான உபகரணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப் பட்டுள்ளது. இவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

6.28 கோடி வாக்காளர்கள்

அனைத்து வாக்குச் சாவடி களுக்கும் தேவையான 1 லட்சத்து 55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,1 லட்சத்து 14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1 லட் சத்து 20,807 விவிபாட் இயந்திரங் கள் ஆகியவை, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத் தப்பட்டு இன்று வாக்குச் சாவடி களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69,955 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக தேர்தல் ஆணையத் தால் 300 கம்பெனி துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 23,200 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீஸார் 74,162 பேர், சிறப்பு காவல்படையை சேர்ந்த 8,010 பேர், போலீஸ் அல் லாத, ஊர்க்காவல் படை, தீய ணைப்பு படை, முன்னாள் படைவீரர் கள் உள்ளிட்ட 34,130 பேர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படைகளைச் சேர்ந்த 18,761 பேர் என மொத்தம் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 58,263 வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைய வரலாற்றில் முதல்முறையாக சுகாதாரப் பணி யாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கரோனா நோயாளிகளுக்கு வாக் களிக்க உதவுதல், அனைத்து வாக்காளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், கிருமிநாசினி வழங்குதல், கவச உடை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.412 கோடி மதிப்பு ரொக்கம் மற் றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப் பட்டுவாடா தொடர்பாக யாருக் கேனும் தகவல் கிடைத்தால் 1950 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் சி-விஜில் செயலி வழியாக புகார் அளிக்கலாம்.

தேர்தல் நாளன்று தேர்தல் பணி களை ஒருங்கிணைக்க 18 மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ் தில் உள்ள அதிகாரிகள் தலைமை யிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி களில் வைக்கப்படும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் 140 தொகுதிகள்

கேரளாவிலும் தேர்தல் ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இங்கும் நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது அணி யாக களத்தில் உள்ளது.

ஆளும் கூட்டணி சார்பில் முதல் வர் பினராயி விஜயன் உள்ளிட் டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் தரப்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் தலை வர்கள் வாக்கு சேகரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

மாநிலம் முழுவதும் நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. நிறைவுநாளான நேற்று முதல்வர் பினராயி விஜயன், தார் மோதம் பகுதியில் வாக்கு சேகரித் தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோழிக்கோடு உள் ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக பிரச்சார நிறைவு நாளில் கேரள அரசியல் கட்சிகள் 'கொட்டி கலாசம்' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 'கொட்டி கலாசம்' நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துவிட்டது.

பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எதையும் உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை என்று பெரும்பாலான அரசியல் நோக் கர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் 30 தொகுதிகள்

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10.04 லட்சம் வாக் காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் பெண்கள் 5.31 லட்சம். ஆண்கள் 4.72 லட்சம். மூன்றாம் பாலினத்தவர் 116 பேர் உள்ளனர். மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகளும் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுதவிர மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக நடை பெற்று வந்த பிரச்சாரம் நேற்றிரவு 7 மணியுடன் ஓய்ந்தது. நிறைவு நாளான நேற்று அரசியல் கட்சி யினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர். தேர்தல் பிரச்சாரம் முடி வடைந்த நிலையில், வெளியாட் கள் அனைவரும் வெளியேறு மாறு தேர்தல் துறை அறிவுறுத்தி யுள்ளது. பல தொகுதிகளில் வாக் காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தேர்தல் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x