

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளது. காய்கறி வரத்து குறைவால் தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி சில்லறை விற்பனையில் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: எல்லா இடங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால், காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் அளவும் குறைந்துள்ளது. பலத்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
வரத்து காய்கறிகள் விற்பனை ஆகாததால் பீன்ஸ், தக்காளி, பச்சை மிளகாய், அவரை, முள்ளங்கி, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் அழுகின. அதனால் அவற்றை வியாபாரிகள் குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 30 டன் அளவுக்கு அழுகிய காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகளுக்கு ரூ.60 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காய்கறி வரத்து குறைவால் அவற்றின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி மொத்த விற்பனையில் ரூ.55-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
பலத்த மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதும், பொதுமக்கள் வராததற்கு காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்க்கெட் நிர்வாகம் சார்பில் தொடர்ச்சியாக ராட்சத பம்பு செட்டுகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.