இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் பணியில் களமிறங்கும் சுகாதாரத் துறை அலுவலர்கள்: வாக்குச்சாவடிகளில் கரோனா விதிகளை அமல்படுத்த ஏற்பாடு

தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சுகாதாரப் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர். இதுதொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக சென்னை தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளிக்கு நேற்று வந்திருந்த சுகாதாரப் பணியாளர்கள்.படம்: எம்.முத்துகணேஷ்
தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சுகாதாரப் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர். இதுதொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக சென்னை தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளிக்கு நேற்று வந்திருந்த சுகாதாரப் பணியாளர்கள்.படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 6.28 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தற்போதுகரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், உரிய பாதுகாப்புக் கவசங்களை அணிந்து, வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசுகள் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பணிகளுக்காக முகக்கவசம், உடல் கவச உடை, கிருமிநாசினி,உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்டவற்றை வாங்க சுகாதாரத் துறைக்கு தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹு ரூ.54 கோடி விடுவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சுகாதாரப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளில் கரோனா பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 பேர் வீதம், மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 874 பேர் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாக்குச்சாவடிகள் தற்போது ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது பணி குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களை போதிய இடைவெளிவிட்டு நிற்க வைத்தல், அவர்களது கைகளில் கிருமிநாசினி தெளித்தல், கையுறை வழங்குதல், முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு முகக் கவசம் வழங்குதல், அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்களிக்க வரும் கரோனா நோயாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு கவச உடை வழங்குதல், பின்னர் அதை, பாதுகாப்பாக திரும்பப் பெற்று, அந்த கழிவுகளை உயிரி மருத்துவக் கழிவு விதிகளின்படி அழிக்க அனுப்புதல், மீதமாகும் கவச உடை, முகக் கவசங்களை திரும்ப ஒப்படைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in