

சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் கடந்த 4 நாட்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை (6-ம் தேதி) நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு நாளன்று அனைத்து தரப்பினருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கடந்த 1-ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 3,090 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதிகரித்த கூட்டம்
இதற்கிடையே, நேற்று மதியம் முதல் பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் நெரிசலை தவிர்க்கும் வகையில் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. இதனால், இந்த பேருந்து நிலையங்களிலும், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தலை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், நேற்று மதியம் முதல் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
டிக்கெட் முன்பதிவு
அதன்படி, கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். 5-ம் தேதி (இன்று) பயணிகள் வருகை அதிக மாக இருக்கும் என்பதால், கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். கூட்ட நெரிசலை தவிர்க்க, நீண்ட தூரம் செல்லும் மக்கள், www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.