

கும்பகோணம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான மூமுக தலைவர் ஜி.எம்.தர் வாண்டையாரை ஆதரித்து, சோழபுரத்தில் நேற்று பிரச்சாரம் செய்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது:
டெல்டா பகுதியைப் பாதுகாக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நான்தான் முதன்முதலாக முன்மொழிந்து, வலியுறுத்தி வந்தேன்.
இதை தமிழக முதல்வர் பழனிசாமி ஏற்றுக்கொண்டு, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதைச் சட்டமாகவும் நிறைவேற்றினார். ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக சோறுபோட்ட இந்தப் பூமியை, அடுத்து வரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இச்சட்டம் பாதுகாக்கும். இதைச் செய்தவர் முதல்வர் பழனிசாமி.
ஆனால், சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைத் தாரை வார்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கர்நாடகாவில் 4 அணைகள் கட்டப்பட்டபோது, அவர் மவுனமாக இருந்தார். இதைவிட மிகப் பெரிய துரோகம், மீத்தேன் திட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து போட்டது தான்.
காவிரி உரிமையில் மட்டுமில்லாமல், கச்சத்தீவையும் இலங்கைக்குத் தாரை வார்த்தவர் கருணாநிதி. நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுக- காங்கிரஸ் கூட்டணிதான். இப்போது, அதை எதிர்த்து ஸ்டாலின் போராடுகிறார். ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
இதேபோல, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காமராஜை ஆதரித்து குடவாசலில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்துக்கு விவசாயத்தை காப்பாற்றக் கூடிய ஒரு சிறந்த முதல்வராக பழனிசாமி கிடைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் விவசாயிகள், ஏழை, எளியவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த ஒரே காரணத்துக்காகவே மீண்டும் பழனிசாமி முதல்வராக்கப்பட வேண்டும் என்றார்.