

தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும், என சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி நேற்று தனது தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. 234 தொகுதிகளில், எடப்பாடி தொகுதி மக்கள், என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வரலாற்று சாதனை படைக்க வைக்க வேண்டும். எனக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி தொகுதியில் பல இடங்களில் நடந்து சென்றதாகக் கூறினார்கள். அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் வீதிகளில் நடந்து சென்று நாடகமாடும் காரியவாதி. நான் உண்மையாக மக்களை நேசித்து வாரம் தோறும் எடப்பாடி தொகுதிக்கு வந்து, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவர்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி தொகுதியில் நான் தோல்வி அடைவேன் என்று கூறி சென்றுள்ளார். அவர் முளையிலேயே கருகிய பயிர். எனது அரசியல் அனுபவம் தான் அவரது வயது. உதயநிதி ஸ்டாலினின் தந்தை ஒரு படி மேலே சென்று, எடப்பாடி தொகுதியில் நான் டெபாசிட் இழப்பேன் என்று கூறியுள்ளார். இதே எடப்பாடி தொகுதியில் திமுக டெபாசிட் இழந்துள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்தபோது, பழனிசாமி என்ற பெயரையே மக்கள் மறந்து விட்டு, எடப்பாடியார் என்றே அழைக்கின்றனர். பழனிசாமி என்ற பெயர் மறைந்து, எடப்பாடியில் உள்ள ஒட்டு மொத்த மக்களையும் குறிக்கும் எடப்பாடியாக நான் மாறியுள்ளேன். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வலிமையை, தேர்தலுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் தெரிந்து கொள்வார்.
பெண்களை இழிவாகப் பேசும் கட்சியாக திமுக உள்ளது. தாயை கொச்சைப்படுத்தி பேசும் திமுக-வுக்கு பொதுமக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அரசியல் ரீதியான விமர்சனம் வேறு; தனி மனித விமர்சனம் வேறு என்பதை அறியாமல், முதல்வரின் தாய் என்றும் பாராமல், பெற்ற தாயை இழிவு படுத்தி பேசுகின்றனர். ஒருவர் மனம் புண்படும் வகையில் பேசும் திமுகவினரை, அதன் தலைவர் ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை. ஏனெனில், திமுக அப்படிப்பட்ட கட்சி.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்த போது, கல் வீசியதில் தலையில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, அறுவறுக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்தவர். அவரின் வாரிசுகள் தான் இவர்கள். திமுக ஆட்சியில் பெண்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ விடமாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வண்டிக்கு 2 சக்கரம் இருந்தால் தான் ஓடும் என்பதை போல, விவசாய அபிவிருத்தித் திட்டம் ஒரு சக்கரமாகவும், தொழிற்துறை வளர்ச்சித் திட்டம் மற்றொரு சக்கரமாகவும் அதிமுக ஆட்சி வெற்றி நடை போடும் தமிழகமாக மாறியுஉள்ளது. தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
முன்னதாக, மாலை 4 மணியில் இருந்து எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததையடுத்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதிமுக தேர்தல் அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை செய்தார்.