

செங்கல்பட்டு நகராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து பெரு நகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால், எந்த வேட்பாளர்களும் பெரு நகராட்சியாக்கப்படும் என்ற வாக்குறுதியை அளிக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சி 134 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய நிதி வசதி இல்லாததால் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. வரியினங்களை உயர்த்த முடியாத நிலையில், நகராட்சியின் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் வருவாயைப் பெருக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்காக அருகில் உள்ள காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அஞ்சூர், குண்ணவாக்கம், பட்ரவாக்கம், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், ஒழலூர், பழவேலி, திம்மாவரம், ஆத்தூர், புலிப்பாக்கம், வீராபுரம், செட்டிப்புண்ணியம் ஆகிய ஊராட்சிகளை செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றில் வீராபுரம், குண்ணவாக்கம், அஞ்சூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பன்னாட்டு தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ளது.
இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் வரிகள் மூலம் நகராட்சி பகுதியில், அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி நிறைவேற்ற முடியும்.
இந்த திட்டத்துக்கு செங்கல்பட்டு நகரத்தில் உள்ள அரசியல் கட்சியினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், இணைக்க திட்டமிடப்பட்டுள்ள ஊராட்சிகளில் உள்ள அரசியல் கட்சியினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஆனால் சமூக ஆர்வலர்கள், குடியிருப்பு வாசிகள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளாக இருக்கும் இந்த கோரிக்கையை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதியாக அளிப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் இதை அறிவிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தாம்பரத்தை மாநகராட்சி ஆக்குவேன் என்றும் வண்டலூர், ஊரப்பாக்கம் நகராட்சியாக மாற்றப்படும் எனவும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார். ஆனால் செங்கல்பட்டு வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. முதல்வர் பழனிசாமியும் நகராட்சி தொடர்பாக எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இத்தேர்தலில் இந்த பிரச்சினை கண்டிப்பாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.