

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கச்சி நம்பிகள் ஒரு நந்தவனத்தை உருவாக்கினார்.
அதில் பூத்த பூக்களால் மாலை தொடுத்து, அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து சென்று, வரதராஜப் பெருமாளுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தார். இத்தகு சிறப்புவாய்ந்த திருக்கச்சி நம்பிகளுக்கு நேற்று பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் மங்களாசாசன உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர், சீனிவாசர், வரதராஜப் பெருமாளுக்கு நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மூன்று பெருமாள்கள் எழுந்தருளிய 3 கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நான்கு வீதிகளில் 3 பெருமாள்கள் மற்றும் திருக்கச்சி நம்பி திருவீதியுலா நடைபெற்றது. மாலையில், அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை சாற்று முறை விமரிசையாக நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.